''காரில் மோடியுடன் 45 நிமிடம் என்ன கதைத்தீர்கள்...?" பதிலளித்த புடின்

 
சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிதிர் புடின் பகிர்ந்துள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு ஒகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பின் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புடினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றனர்.
இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. காருக்குள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.

காரணம் பிரதமர் மோடிக்காக 15 நிமிடங்கள் காத்திருந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது காரில் அழைத்துச் சென்றார்.

கூட்டம் நடைபெறும் இடத்தை அடைவதற்கான பயணம் 15 நிமிடங்கள் மாத்திரமேயாகும். ஆனால் அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர காரில் கூடுதலாக 45 நிமிடங்கள் செலவிட்டனர்.

இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காருக்குள் மோடியுடன் பேசியது என்ன என்பது குறித்த கேள்வி புடினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இதில் ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் அலாஸ்காவில் என்ன பேசினோம் என்பதை அவரிடம்  கூறினேன்” என்று தெரிவித்தார்.


இதேநேரம் அமெரிக்க - இந்திய உறவுகள் விரிசலைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா விரைவில் ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.